எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம் பூ கொடுத்து வரவேற்பு
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புகளுக் கான வகுப்புகள் தொடங்கியது. புதிதாக வந்த மாணவர்களை மூத்த மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.
ஆண்டிப்பட்டி,
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கியது. தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பின் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு வந்த மாணவ- மாணவிகளை வரவேற்கும் வகையில் விழா அரங்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் ‘ராகிங்’ என்பது இல்லை என்றும், இதேநிலை தொடரும் வகையில் ‘ராகிங்’ தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். துணை முதல்வர் டாக்டர் எழிலசரன், மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு வந்த மாணவ-மாணவிகளை, அதே கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்கள் ரோஜா பூக்களை கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story