தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 700 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் பூ வியாபாரி கைது


தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 700 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் பூ வியாபாரி கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 700 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மல்லிகை பூ வியாபாரியை கைது செய்தனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள தளிஞ்சி ஊராட்சி புரசம்பட்டியில் சிலர், கள்ளசாராயத்திற்கு பயன்படுத்தும் மூலப்பொருளான எரிசாராயத்தை காய்ச்சி பதுக்கி வைத்திருப்பதாக கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, பாஸ்கரன் உள்பட போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று புரசம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் சுற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த கொட்டகைக்குள் சென்றபோது அங்கு ஒருவர் எரிசாராய கேன்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்த சக்திவேல்(வயது 43) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் உள்பட சிலர் சேர்ந்து எரிசாராயத்தை பதுக்கி வைத்து அதில் போதை பொருள் சேர்த்து டாஸ்மாக் மதுபானத்தை போல் மதுபாட்டிலில் அடைத்து வைத்து விற்க திட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையே அந்த கொட்டகையை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்து தலா 35 லிட்டர் அளவுடைய 20 கேன்களில் இருந்து மொத்தம் 700 லிட்டர் எரிசாராயத்தையும், சட்டவிரோத தொழிலுக்கு வைத்திருந்த கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்ட தோட்டம் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமானது என்பதும், போலி மதுபானம் தயாரித்து அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த செயலில் சக்திவேல் உள்ளிட்டோர் ஈடுபட்டதும், சக்திவேல் மல்லிகை பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் வியாபாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இதில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த நாகராஜ், பிரபாகர், முத்துகுமார், கோச்சை குமார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே 700 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story