சிறுபான்மையினருக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு, கலெக்டர் தகவல்


சிறுபான்மையினருக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ஆகியவை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகளிடம் இருந்து கடன் உதவிக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:–

 தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்ய பல்வேறு கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) செயல்படுத்தி வருகிறது.

கல்விக்கடன் திட்டம்–1–ல் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையில் ஆண்டிற்கு 3 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், கிராமப்புறமாயின் ரூ.98,000–மும் இருத்தல் அவசியம். கல்விக்கடன் திட்டம்–2–ல் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையில் ஆண்டிற்கு மாணவருக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத விகிதத்தில் வழங்கப்படுகிறது.

இதில் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்துக்கு ரூ.1,20,001 முதல் ரூ.6 லட்சம் வரை இருத்தல் அவசியம். கல்வி பருவக்காலம் முடிந்த தேதியில் இருந்து, அல்லது அடுத்த 6–வது மாதத்தில் இருந்து, அல்லது பணியில் அமர்ந்த தேதியில் இருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியில் இருந்து 60 மாதங்கள் வரை வசூலிக்கப்படும்.

மேலும் தனி நபர் கடன் திட்டம், வியாபாரம், தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் அளிக்கப்படுகிறது. சில்லரை வியாபாரம், மரபு வழிச்சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில் நிலையங்கள், இலகு ரக போக்குவரத்து வாகன கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறு கடன் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018–19ம் நிதியாண்டில் ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனை சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கடன் தொகை பெற சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், பயனீட்டுச்சான்றிதழ், கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் முன்னோடி வங்கி ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவதாஸ், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story