வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 13–ந்தேதி வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் முத்துராமு நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016–17, 2017–18–ம் ஆண்டுகளில் தலா ஒரு லட்சத்து 22ஆயிரம் விவசாயிகள் சுமார் 3 லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்தனர். ஆனால் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வறண்டு பாலைவனம் போல் காட்சிஅளிக்கிறது. பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைந்து திரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர். மேலும் தண்ணீர் இல்லாமல் கால்நடைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கால்நடைகள் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது. மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்த விவசாயிகளுக்கு குண்டுமணி நெல் கூட கிடைக்கவில்லை.
இதனால் செய்வதறியாது தவித்து கொண்டிருக்கின்றனர். மேலும் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமலும், வங்கிகள் மற்றும் தனியார் அடகு கடைகளில் வைத்த நகைகளுக்கு வட்டி கட்டமுடியாத நிலையில் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மத்திய–மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். இதற்கு உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டருடம் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதிஅளித்தார்.
மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டுஉள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் வழங்கிஉள்ளோம். இதேபோல கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தும், நடைபயணம் மேற்கொண்டும் எங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.
இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விவசாயிகளின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முத்துராமு, செயலாளர் மயில்வாகனன், மாநில பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் சட்டமன்ற வளாகத்தில் வருவாய்த்துறை அமைச்சரிடம் நேரில் எடுத்து கூறி விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தினோம்.
ஆனால் இதுநாள் வரை விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. எனவே வருகிற 13–ந்தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விவசாயிகளை பெரிய அளவில் திரட்டி குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் தமிழக அரசு விவசாயிகளை பாதுகாக்க உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன், வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.