புதிதாக கட்டப்பட்ட படித்துறை குளத்தில் மூழ்கியது நடவடிக்கை எடுக்க, கிராமமக்கள் கோரிக்கை


புதிதாக கட்டப்பட்ட படித்துறை குளத்தில் மூழ்கியது நடவடிக்கை எடுக்க, கிராமமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்ட படித்துறை குளத்தில் மூழ்கியது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே பழையனூர் ஊராட்சியில் ஓமக்குளம் தெரு உள்ளது. இந்த தெருவில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தெரு மக்களின் பயன்பாட்டிற்காக 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஓமக்குளத்தில் ரூ.1½ லட்சம் செலவில் புதிய படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறை குளத்தின் கரையோர மேல் பகுதியில் கட்டுவதற்கு பதிலாக குளத்திற்குள் ஆழமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வந்ததால் குளத்தில் தண்ணீர் சென்றது. குறைந்த அளவில் குளத்தில் தண்ணீர் சென்றபோதே புதிதாக கட்டப்பட்ட படித்துறை தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதனால் படித்துறையை காணவில்லை என்றே அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து இப்போதுதான் இந்த ஓமக்குளத்தில் படித்துறையை கட்டி தந்துள்ளனர். இதனால் சந்தோஷம் அடைந்தோம். ஆனால் குளத்தில் தண்ணீர் விட்ட பிறகு தான் எங்களுக்கே அதிர்ச்சியானது. படித்துறை தவறான இடத்தில் கட்டப்பட்டது என்பது அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் மூழ்கி உள்ள படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

Next Story