நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை காட்டி பள்ளி மாணவியிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர் கைது
பள்ளி மாணவியிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மீது வளசரவாக்கத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், விக்னேஷ் தனது மகளை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, நெருக்கமாக இருப்பதுபோல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த புகைப்படங்களை காட்டி தனது மகளிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதையடுத்து மகளிர் போலீசார் விக்னேசை அழைத்து விசாரித்தனர். அதில், அவர் பள்ளி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவரிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story