நர்சிங் பயிற்சி பள்ளி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
திட்டக்குடியில் பெண்ணை கொலை செய்ய முயன்ற நர்சிங் பயிற்சி பள்ளி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கடலூர்,
திட்டக்குடி திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி கண்ணகி (வயது 30). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கண்ணகி தன்னுடைய கணவன் இளங்கோவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் பெரியார் நகரை சேர்ந்த ராமு மகன் அய்யப்பன் (33) என்பவருடன் கண்ணகிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கண்ணகியும், அய்யப்பனும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திடீரென கண்ணகி அய்யப்பனுடனான தொடர்பை துண்டித்தார். அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அய்யப்பன் ஆத்திரம் அடைந்தார். கடந்த 13.8.2016 அன்று கண்ணகி கடைவீதியில் பூ விற்பனை செய்து விட்டு, அதே ஊரை சேர்ந்த சம்பத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
இதை பார்த்த அய்யப்பன் அவரை பின்தொடர்ந்து சென்று, கத்தியால் வெட்டினார். இதில் கண்ணகியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது பற்றி கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் அய்யப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட கண்ணகிக்கு இழப்பீடு தொகையாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார். தண்டனை பெற்ற அய்யப்பன் திட்டக்குடியில் நர்சிங் பயிற்சி பள்ளியும், செல்போன் கடையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story