அடுத்தடுத்து 4 இடங்களில் செல்போன்கள் பறித்த 2 பேர் கைது
அடுத்தடுத்து 4 இடங்களில் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரை அடுத்த பேரமனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 31). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் கார் தொழிற்சாலை அருகே உள்ள டீ கடை அருகே செல்போனில் பேசியபடி நின்றார்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சேட்டு கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
திருக்கச்சூர்
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் ஒரகடத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் திருக்கச்சூர் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் சதீஷ்குமாரை வழிமறித்து கத்தியைக்காட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
சிங்கபெருமாள்கோவில்
இதேபோல் மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் ஒரகடத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் சிங்கபெருமாள்கோவில் அருகே சாலையில் நடந்து செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதேபோல் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (26). இவர் தியாகராய நகரில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிங்கபெருமாள்கோவில் அருகே சாலையில் நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் கத்தியைக்காட்டி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
இந்த 4 வழிப்பறி சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் செல்போன் பறிப்பு வழக்கில் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (19), பேரமனூர் பகுதியை சேர்ந்த 18 வயதான ஒருவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story