மதுராந்தகத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
மதுராந்தகத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமர் கோவில், சோழர் கால வெண்காடீஸ்வரர் கோவில், வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளது. மதுராந்தகம் மற்றும் அதன் சற்று வட்டார பகுதிகளிலும் பள்ளிகள், என்ஜினீயரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.
மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமானோர் பல்வேறு வேலைகளுகாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குருவாயூர், சோழன், திருச்செந்தூர், சேது, மும்பை- நாகர்கோவில் போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. அந்த ரெயில்கள் அங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோரிக்கை
மேலும் எழும்பூர்- புதுச்சேரி, புதுச்சேரி - எழும்பூர் பயணிகள் ரெயில்களில் நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே அந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மேலும் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இந்த பகுதி மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல மேல்மருவத்தூர், செங்கல்பட்டு போன்ற ரெயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் செங்கல்பட்டு அல்லது மேல்மருவத்தூர் ரெயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஆகவே மதுராந்தகத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story