3 ஆட்டோக்களில் பொருட்கள் திருட்டு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பத்தில் 3 ஆட்டோக்களில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜ், சோழவல்லியை சேர்ந்தவர் பழனி, வஜீர்கான் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள். நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் தங்களது வீடுகள் முன்பு ஆட்டோக்களை நிறுத்தி இருந்தனர். நேற்று காலை பார்த்தபோது, 3 ஆட்டோக்களின் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள், 2 கை கடிகாரம், ரூ.2,500 ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் தனித்தனியாக நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதேபோல் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு அரிசி கடைக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர், கடை உரிமையாளரிடம் அரிசி தருமாறு கூறினார். உடனே அவர், அரிசியை எடை போட்டுக்கொண்டிரந்தார். அந்த சமயத்தில், அந்த வாலிபர் திடீரென கடை கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4 ஆயிரத்தை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பத்தில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.