தமிழகத்தில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


தமிழகத்தில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,


புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆரம்பித்து 2–ம் ஆண்டு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக சுகாதாரத்துறை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. தமிழகத்திலேயே சிறந்த மருத்துவக்கல்லூரியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் விரைவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் திறந்து வைக்கப்பட உள்ளது. இதேபோல கேத் லேப், கோபால்ட் தெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் இந்த மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட உள்ளன என்றார்.

விழாவில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., அரசு மருத்துவ கல்லூரி டீன் சாரதா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

 தமிழகத்தில் 72 இடங்களில் விபத்து சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இந்த சிகிச்சை மையங்கள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விபத்து நடந்த இடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிலைப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பாடிநல்லூர், ஈசியார் சாலையில் உள்ள ஈச்சம்பாக்கம், தாம்பரத்தில் உள்ள குரோம்பேட்டை உள்ளிட்ட 3 இடங்களில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் 10 இடங்களில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.

 உலக அளவில் விபத்து நடக்கும் இடங்களுக்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 8 நிமிடம் ஆகும். தமிழகத்தில் சென்னை போன்ற நகர பகுதிகளில் கடந்த ஆண்டு விபத்து நடைபெற்ற இடங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடமாக இருந்தது. தற்போது 8.32 நிமிடங்களில் விபத்து நடந்த இடங்களுக்கு சென்று விடுகிறது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் சேவையில் உலக அளவில் 2–வது இடத்தில் தமிழகம் உள்ளது.

 முதலிடத்தில் வருவதற்கு 108 ஆம்புலன்சில் ஜி.பி.எஸ் கருவி பொருத்துதல், வாகன ஓட்டுனருக்கு ஸ்மார்ட்போன் வழங்குதல், அவசர 108 செயலி உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் கிராமப்புற பகுதிகளில் விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் 17 நிமிடத்தில் செல்வது தற்போது 13.5 நிமிடமாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த நேரத்தை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 108 ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story