குளத்தில் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளியை கொன்றது அம்பலம் மனைவி உள்பட 2 பேர் கைது


குளத்தில் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளியை கொன்றது அம்பலம் மனைவி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில், தொழிலாளி குளத்தில் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் அவரை கொன்ற மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரத்தில், தொழிலாளி குளத்தில் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் அவரை கொன்ற மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள கரிசலுாரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 42), சாக்கு தைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (37). கடந்த 20-ந் தேதி குடும்பத்தினருடன் ஆறுமுகநயினார் பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

மறுநாள் அவர் ஊருக்கு திரும்பி வரவில்லை. அவருடைய மனைவி ஜெயந்தி மட்டும் வந்தார். அப்போது கணவரை திடீரென காணவில்லை என கூறினார். உறவினர்களுடன் சேர்ந்து கணவரை அவரும் தேடிவந்தார்.

வழக்கில் திடீர் திருப்பம்

இந்த நிலையில் 22-ந்தேதி பக்கத்து ஊரான மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள குளத்தில் ஆறுமுகநயினார் பிணமாக மிதந்தார். ஜெயந்தி கொடுத்த தகவலின் பேரில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பாவூர்சத்திரம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருடைய உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர், ஆறுமுகநயினார் கொலை செய்யப்பட்டதாக அறிக்கை கொடுத்தனர். இந்த அறிக்கையை தொடர்ந்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மனைவியே கொன்றது அம்பலம்

மேலும், ஜெயந்தியின் நடத்தையை கண்காணித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது. கணவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று மீண்டும், மீண்டும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில், ஆறுமுகநயினார் கொலை செய்யப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் போலீசாரிடம் கூறுகையில், ‘களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த தாய்மாமன் கணபதியின் மகன் தங்கராஜூவுடன் (41) திருமணத்துக்கு முன்பே தனக்கு தொடர்பு இருந்தது. எனக்கு திருமணமான பின்னரும் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந்தோம். இதை அறிந்த கணவர் அதை கண்டித்தார். இதனால் அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து குளத்தில் வீசினோம்’ என தெரிவித்துள்ளார்.

2 பேர் கைது

இதையடுத்து ஜெயந்தி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோரை நேற்று பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story