இன்று ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


இன்று ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:45 AM IST (Updated: 3 Aug 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

இன்று (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானி கூடுதுறையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பவானி,

ஆடிப்பெருக்கு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோர் பவானி கூடுதுறையில் கூடுவார்கள். ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.

பாசனத்துக்காக தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திதி கொடுக்க வரும் பக்தர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கி நீராடுவார்கள். இதன் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் ஆபத்தான பகுதிகள் என்று ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ (பவானி), ரவி (அந்தியூர்), சரவணன் (பவானி), வினோதினி (பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு பரிசல் ஓட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள். குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க ஆண், பெண் போலீசார் மாறுவேடத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பழைய பஸ் நிலையம், பூக்கடை, பவானி கூடுதுறை, கோவில் நுழைவுவாயில் உள்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பவானிக்கு வரும் பஸ்களை பழைய பஸ் நிறுத்தத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Next Story