தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
கலந்துரையாடல்தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க செயலாளர் கோடீசுவரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. துறைமுகம், அனல்மின் நிலையங்கள், உரத்தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. சென்னைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, ஆகாய வழி போக்குவரத்து ஆகிய 4 வழி போக்குவரத்துக்கும் சாதகமாக அமைந்து உள்ளது. மதுரை–தூத்துக்குடி இடையே புதிய தொழில் பூங்கா விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கைதூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வாய்ப்பு உள்ள தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச அளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விமான ஆணையத்திடம் வழங்கப்பட்டு உள்ளன. அதே போன்று உடன்குடியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொழில் முன்னேற்றத்துக்காக, அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இந்திய வர்த்தக தொழில் சங்கத்தினர், தொழிற்சாலைகள் தேவைக்காக கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி 1–ம் கேட், 2–ம் கேட் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, வி.வி.டி. சிக்னலில் மேம்பாலம் பணிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமசுப்பிரமணியன், எட்வின் சாமுவேல், பொன் வெங்கடேஷ், தர்மராஜா, நேருபிரகாஷ், ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.