ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் காயம்: தனியார் நிறுவன நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு


ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் காயம்: தனியார் நிறுவன நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தது தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தது தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அமிலம் கொட்டி 2 பேர் காயம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயனங்களை அகற்றும் பணி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதியம் ஆலையில் இருந்து 2-வது டேங்குக்கு கந்தக அமிலம் கொண்டு செல்லப்படும் ஒரு குழாயை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி கிருபைநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 39), அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயசங்கர் (29) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அந்த குழாயில் இருந்த ஒரு வால்வை திறந்தபோது, வெளியேறிய கந்தக அமிலம் பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர் ஆகியோர் மீது கொட்டியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் ஆலைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணம் வழங்காததால் விபத்தில் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாக, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் இளையராஜா, மேலாளர் முத்துராமன், ஒப்பந்ததாரர் பிரேம்குமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story