சமயபுரம் கோவிலில் முறைகேடு புகார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உதவி ஆணையர் பணியிடை நீக்கம்


சமயபுரம் கோவிலில் முறைகேடு புகார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உதவி ஆணையர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:30 AM IST (Updated: 3 Aug 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் கோவிலில் முறைகேடு புகார் தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உதவி ஆணையர் ரெத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சமயபுரம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் ரெத்தினவேல். இவர் கடந்த 2010-12-ம் ஆண்டில் சமயபுரம் மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது கோவில் மூலஸ்தான முகப்பு வாயிலில் தங்க முலாம் பூசுவதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இதற்காக நகை சரிபார்ப்பு அதிகாரியாக இளம்பரிதி என்பவர் இருந்தார். அந்த பணியை மேற்கொண்டபோது, அதில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன.

இதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்தில் இருந்து கூடுதல் ஆணையர் ராஜா சமயபுரம் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினார். இதில் முறைகேடு நடந்திருப்பதாக அவர் கொடுத்த தகவலின்அடிப்படையில் பாரதி, ரெத்தினவேல், இளம்பரிதி உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ரெத்தினவேல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று அங்கிருந்து வேறு மாவட்டத்துக்கு மாறுதலாகி சென்று விட்டார்.

பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரெத்தினவேல் பணி மாறுதலாகி ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். இந்தநிலையில் கடந்த 31-ந் தேதியுடன் அவர் பணி ஓய்வுபெற இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக சமயபுரம் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக அவரை பணியிடை நீக்கம் செய்து, அறநிலையத்துறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பணி ஓய்வுபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story