சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி நேர்மையை பாராட்டி பரிசு


சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி நேர்மையை பாராட்டி பரிசு
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

அரூரில் சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்து வந்து ஒப்படைத்த தொழிலாளியை போலீஸ் அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் கே.கே. நகரை சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர் திருப்பூரில் கட்டிட தொழில் செய்து வருகிறார். ஏழ்மையான நிலையில் திருப்பூரில் தங்கி பணியாற்றும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று காலை இவர் வீட்டில் இருந்து முருகன் கோவில் தெரு வழியாக காய்கறி வாங்க சாலையில் நடந்து சென்றார்.

அப்போது சாலையோரம் 500 ரூபாய் நோட்டு கட்டு ஒன்று கிடந்தது. அந்த பணத்தை எடுத்த பாரதி அக்கம் பக்கத்தினரிடம் கேட்டார். ஆனால் யாரும் பணத்திற்கு சொந்தம் கொண்டாடவில்லை. இதையடுத்து அவர் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்து வந்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் பவுலோஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தார். அவர்கள் அதனை எண்ணி பார்த்தபோது ரூ.25 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தொழிலாளி பாரதியின் நேர்மையை பாராட்டிய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு பரிசு வழங்கி பாராட்டினர். பணத்தை தவற விட்டவர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பெற்று செல்லுமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தெரிவித்தார். சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்து வந்து போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்த தொழிலாளியை பொதுமக்கள் பாராட்டினர். 

Next Story