போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தவர் கைது கார், மதுபாட்டில்கள் பறிமுதல்


போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தவர் கைது கார், மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Aug 2018 11:00 PM GMT (Updated: 2 Aug 2018 8:33 PM GMT)

கிருஷ்ணகிரியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி சத்ரபதிசிவாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் மண்டல மதுவிலக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன் பேரில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அதிரடியாக அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள நெடுசாலை கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்கிற மாதேஸ்வரன் (வயது 40) என்பவர், காட்டிநாயனப்பள்ளி சத்ரபதி சிவாஜி நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வைத்து போலி மதுபானம் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாதேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கார், எரி சாராயம், போலி மதுபான பாட்டில்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இந்த மதுபான பாட்டில்கள் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல தாபா ஓட்டல்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும் பெங்களூருவில் இருந்து எரிசாராயம் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வேலூர் மாவட்டம் கனியம்பாடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story