வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு; உரிமையாளர்கள் சாலைமறியல்


வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு; உரிமையாளர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:45 AM IST (Updated: 3 Aug 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு துணிக்கடை, பழக்கடை, சிக்கன் கடை என 30-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப் பட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் வனத்துறை அலுவலக குடியிருப்பு பகுதியில் புதிதாக குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தாங்களாகவே கடைகளை அகற்றிக்கொள்கிறோம், அதிகாரிகள் அகற்ற வேண்டாம் என கடை உரிமையாளர்கள் போலீசாரிடம் கூறினர்.

இதைத் தொடர்ந்து அவர்களே கடைகளை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story