மடத்துக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார்


மடத்துக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:15 AM IST (Updated: 3 Aug 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், மடத்துக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி,




பழனி முருகன் கோவிலில் பூஜை கைங்கரியங்கள் செய்வதற்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கவும் பழனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக பழனி பகுதியை சேர்ந்த பலர் தங்கள் நிலங்களை மடங்கள் அமைப்பதற்காக தானமாக வழங்கினர். இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் தற்போது சிக்கியுள்ளன.

இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணனுக்கு பக்தர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அவர் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தார். மேலும் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பின்னர் பழனி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பழனியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பழனி-புதுதாராபுரம் சாலையில் இருந்த சிவமடத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

இந்த நிலையில் பழனி-அய்யம்புள்ளி ரோட்டில் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட மடத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்றும் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் பழனி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் செய்தார். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அந்த இடத்தை பார்வையிட்டு நிலத்திற்கான வரைபடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் நில அளவையர் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை அளவீடு செய்தனர். இதையடுத்து ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாபுரம் கிராமத்தில், பழனி கோவில் நிர்வாகத்துக்கு குத்தகை தொகை செலுத்தாமல் பயன்படுத்தப்பட்டு வரும் 11 ஏக்கர் விளைநிலத்தை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மடத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story