மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜர் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு


மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜர்  முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை சோதனையில் ரூ.8.59 கோடி சிக்கிய வழக்கில், பெங்களூரு கோர்ட்டில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேர் நேரில் ஆஜரானார்கள்.

பெங்களூரு,

வருமான வரித்துறை சோதனையில் ரூ.8.59 கோடி சிக்கிய வழக்கில், பெங்களூரு கோர்ட்டில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேர் நேரில் ஆஜரானார்கள். மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரூ.8.59 கோடி சிக்கியது

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் இவர் மந்திரியாக இருந்தார். அப்போது கடந்த ஆண்டு (2017) மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் டெல்லியில் உள்ள மந்திரி டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ரூ.8 கோடியே 59 லட்சம் சிக்கியது.

அப்போது அந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மந்திரி டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்களான சச்சின் நாராயணன், சுனில்குமார் சர்மா, அனுமந்தய்யா, ஆஞ்சனேயா, ராஜேந்திரா ஆகிய 6 பேரும் தவறான தகவல்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும் அந்த பணத்தை காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களுக்கு டி.கே.சிவக்குமார் கொடுக்க வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேர் மீதும் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மந்திரி டி.கே.சிவக்குமார் ஆஜர்

இதுதொடர்பான வழக்கு பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேரையும் நேற்று கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து, மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று காலை 11 மணியளவில் பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது அவருடன் ஆதரவாளர்கள் சச்சின் நாராயணன், சுனில்குமார் சர்மா, அனுமந்தய்யா, ஆஞ்சனேயா, ராஜேந்திரா ஆகிய 5 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்கள். பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமார் சார்பில் மூத்த வக்கீல் ஆச்சாரியா ஆஜரானார்.

முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

பின்னர் மூத்த வக்கீல் ஆச்சாரியா வாதாடும் போது “வருமான வரித்துறை சோதனையில் ரூ.8 கோடியே 59 லட்சம் சிக்கியது தொடர்பான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்க கோரி, சச்சின் நாராயணன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 5 பேருக்கும் பொருந்தும். அதனால் முன்ஜாமீன் மனு மீது மட்டும் விசாரணை நடைபெற வேண்டும்“ என்றார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேரும் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீது நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேருக்கும் சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். இதனால் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். பின்னர் கோர்ட்டில் இருந்து மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 6 பேரும் புறப்பட்டு சென்றார்கள்.


Next Story