60 அடி சாலை அமைப்பதற்காக அண்ணாநகரில் கிறிஸ்தவ தேவாலயத்தின் சுவர் இடிப்பு மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு


60 அடி சாலை அமைப்பதற்காக அண்ணாநகரில் கிறிஸ்தவ தேவாலயத்தின் சுவர் இடிப்பு மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Aug 2018 5:15 AM IST (Updated: 3 Aug 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாநகரில் 60 அடி சாலை அமைப்பதற்காக கிறிஸ்தவ தேவாலயத்தின் சுவர் இடிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூ தங்கம் காலனியில் 800 மீட்டர் நீளத்துக்கு 60 அடி அகலத்தில் சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கடந்த 1991-ம் ஆண்டு திட்டம் வகுத்தது.

இதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள 50 ஆண்டு கால பழமையான சி.எஸ்.ஐ. இம்மானுவேல் திருச்சபை கிறிஸ்தவ தேவாலயம், 14 குடியிருப்புகளில் சில அடி அளவு நில ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண 60 அடி சாலை அமைப்பது அவசியம் என்று வழக்கு தொடர்ந்தார்.

நிலம் கையகப்படுத்துதல்

இந்தநிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அண்ணாநகர் கோட்டத்தின் செயற்பொறியாளர் பூபதி, அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலர் பரந்தாமன் உள்பட அதிகாரிகளும், ஊழியர்களும் நேற்று காலை 9 மணியளவில் தங்கம் காலனிக்கு வந்தனர். சாலை அமைப்பதற்கு தேவையான இடத்தை கையகப்படுத்துவதற்காக ஜே.சி.பி.எந்திரங்களும், லாரிகளும் வரவழைக்கப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்து தேவாலயத்தின் பாதிரியார் சாம் ராஜ்குமார் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் உதவி கமிஷனர்கள் முத்துமாணிக்கம், குணசேகரன், சிவகுமார் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

போலீசார் பாதுகாப்புடன் கிறிஸ்தவ தேவாலயத்தின் மதில் சுவரை இடிக்க முயன்றபோது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்ய முற்பட்டபோது கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஒரு சிலரை கைது செய்து அழைத்து சென்றனர். அதன்பின்னர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.

பாதிரியார் எதிர்ப்பு

அதிகாரிகள் நடவடிக்கைக்கு கிறிஸ்தவ தேவாலயத்தின் பாதிரியார் சாம் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்து கூறியதாவது:-

எங்களுடைய திருச்சபை வருகிற 19-ந்தேதி பொன் விழா ஆண்டை கொண்டாட உள்ளது. ரத்ததான முகாம், நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த வேளையில் தேவாலயத்தின் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பட்டா வசதியுடைய இடத்தை கையகப்படுத்துவதற்கு இழப்பீடோ? மாற்று இடமோ? வழங்கப்படவில்லை. புது நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடவடிக்கை எடுத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆகும். எனினும் இவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நொளம்பூர் போன்ற இடங்களில் ஏற்கனவே நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. பலமுறை வாய்மொழியாகவும், நோட்டீஸ் மூலமாகவும் தகவல் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின்படி சி.எம்.டி.ஏ. அனுமதியுடன் சாலை அமைப்பதற்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.’ என்றனர்.

வைகோ கண்டனம்

மதில் சுவர் இடிக்கப்பட்ட தேவாலயத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அவர் அதிகாரிகளின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்தார். 

Next Story