பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்


பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:13 AM IST (Updated: 3 Aug 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, பொக்லைன் எந்திரம் மூலம் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்க்காரப்பட்டி,



பழனியை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஸ்ரீபிரியா (வயது 50) என்ற மனைவி உள்ளார். நந்தகோபால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (54) என்பவரிடம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தார்.

அவர் இறந்த பிறகு, ஸ்ரீபிரியா அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குத்தகை காலம் முடிந்து விட்டதாக கூறி நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி ராமசாமி கேட்டுள்ளார். ஆனால் ஸ்ரீபிரியா தரப்பினர் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து ராமசாமி தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி பழனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேளையில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு மர்ம நபர்கள் சிலர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பெட்ரோல் விற்பனை நிலைய அலுவலக கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தினர். மேலும் பெட்ரோல் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் சேதப்படுத்தினர். இதைப்பார்த்த ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து ஸ்ரீபிரியா தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், நிலத்தின் உரிமையாளரான ராமசாமி ஆட்களை வைத்து தனது பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ராமசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில் எப்படி பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்தியிருக்க முடியும் என ராமசாமி தெரிவித்தாக போலீசார் கூறினர்.

அப்படியானால் ஸ்ரீபிரியாவின் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story