உத்திரமேரூர் அருகே பாலீஷ் போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை திருட்டு
உத்திரமேரூர் அருகே பாலீஷ் போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பெருங்கோழி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவரது மனைவி செந்தாமரை (வயது 47). இவர் வீட்டில் இருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினார்கள்.
இதனை நம்பிய செந்தாமரை தனது 4½ பவுன் தங்கச்சங்கிலி, ¼ பவுன் கம்மல், ¼ பவுன் மோதிரம் என்று மொத்தம் 5 பவுன் தங்க நகைகளை அவர்களிடம் பாலீஷ் போடுவதற்கு கொடுத்ததாக தெரிகிறது.
திருட்டு
பாலீஷ் போடுவதற்கு முன்பு அந்த மர்ம நபர்கள் தாகமாக உள்ளது. தண்ணீர் கொண்டு வருமாறு தெரிவித்தனர். அப்போது செந்தாமரை தண்ணீர் கொண்டு வருவதற்கு வீட்டின் உள்ளே சென்றார். தண்ணீர் கொண்டு வந்து பார்த்தபோது அவர்கள் 2 பேரும் தங்க நகைகளுடன் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து அவர் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்குப்பதிவு செய்து பாலீஷ் போடுவது போல் நடித்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story