இளம்பெண் கற்பழிப்பு: ‘போக்சோ’ சட்டத்தில் காதலன் கைது


இளம்பெண் கற்பழிப்பு: ‘போக்சோ’ சட்டத்தில் காதலன் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 3:21 AM IST (Updated: 3 Aug 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த காதலனை, போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல்,


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூற்படுவதாவது:-

திண்டுக்கல் அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த காமராஜ் மகன் கனகபாண்டி (வயது 24). ஆட்டோ டிரைவர். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக கனகபாண்டியின் ஆட்டோவில் பயணம் செய்தபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்காக அந்த இளம்பெண் சென்றார். அப்போது மழை பெய்ததால், வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி அவரை, கனகபாண்டி ஆட்டோவில் அழைத்துச்சென்றார். இதையடுத்து திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள கண்மாய் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, கனகபாண்டி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்துள்ளார். இதையடுத்து மாலையில் வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக அந்த பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அன்று இரவு முழுவதும் அவர்கள் கண்மாய் பகுதியிலேயே இருந்துள்ளனர். அப்போதும், கனகபாண்டி அந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

இதற்கிடையே மார்க்கெட்டுக்கு சென்ற மகள் இரவு வரை வீடு திரும்பாததால், அவரை பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே அடுத்தநாள் காலையில் அவரை வீட்டருகே விட்டுவிட்டு கனகபாண்டி சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்த மகள் சோர்வாக காணப்பட்டதால் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்தபோது, அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மும்தாஜ், கனகபாண்டியை கைது செய்தார். 

Next Story