படப்பை அருகே குழந்தை கடத்தல் 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் 6 மணி நேரத்தில் மீட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த காவனூர் கிராமத்தில் உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மகன் சந்திரசேகர் (3). நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சந்திரசேகரை திடீரென காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமராஜ் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், காணமல் போன குழந்தையை திருநங்கை ஒருவர் வைத்திருந்ததாக அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குழந்தை கடத்தியவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த குழந்தை கடத்திய நபர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாசலில் குழந்தையை விட்டு விட்டு மாயமாகிவிட்டார். இரவு 10 மணியளவில் பள்ளிக்கூட வாசலில் அழுது கொண்டிருந்த குழந்தையை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், மற்றும் குழந்தையின் பெற்றோர் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story