கழிவறையில் ரத்தம் கொட்டிய விவகாரம்: போலியாக வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் ஊழியர் உள்பட 2 பேர் பணி நீக்கம்


கழிவறையில் ரத்தம் கொட்டிய விவகாரம்: போலியாக வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் ஊழியர் உள்பட 2 பேர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:25 AM IST (Updated: 3 Aug 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் கழிவறையில் ரத்தம் கொட்டிய விவகாரத்தில் பணம் பெற்றுக் கொண்டு போலியாக வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் ஊழியர் உள்பட 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் கழிவறையில் ரத்தத்தை ஊற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக டீன் மருதுபாண்டியன், ரத்த வங்கித்துறை தலைவர் சிந்தா, இருதயவியல் துறை தலைவர் ரத்தினவேல் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் ரத்த வங்கியில் கல்லூரி மாணவர்கள், ரத்த தான கொடையாளர்கள் மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இந்த ரத்தம் பல்வேறு வகைகளில் பிரிக்கப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படுகிறது. இதில் 70 சதவீத ரத்தம் பிரசவ சிகிச்சைப்பிரிவு மற்றும் விபத்துகளில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பதற்காக வழங்கப்படுகிறது.

பெரிய ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தை பரிசோதனை செய்யும் போது எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள்காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது தெரியவந்தால் அந்த ரத்தத்தை மற்றவர்களுக்கு செலுத்தமுடியாது. அந்த ரத்தம் கழிவு ரத்தமாக கருதப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்படும். மேலும் தானமாக பெறப்படும் ரத்தத்தை நோயாளிகளுக்கு அப்படியே செலுத்தி விட முடியாது. அதில் இருந்து சிவப்பணுக்கள், தட்டையணுக்கள், பிளாஸ்மா ஆகியவை பிரிக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும். ஒருவரின் ரத்தத்தில் இந்த மூன்றும் பிரிக்கப்பட்ட பிறகு வெள்ளையணுக்கள் மட்டுமே மிஞ்சும். இந்த வெள்ளையணுக்களை நோயாளிகளுக்கு செலுத்த முடியாது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் ரத்தத்தை கழிவறையில் கொட்டுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரத்த வங்கியில் பணியாற்றும் ஏஞ்சலின் நந்தினி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன துப்புரவு பணியாளர் முனியசாமி ஆகியோர், சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ரத்தத்தை கழிவறையில் ஊற்றுவதுபோல போலியாக வீடியோ எடுத்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கழிவறையில் ஊற்றப்படுவது போல காண்பிக்கப்படும் ரத்த உறை எண் 13150, பிரசவ சிகிச்சைப்பிரிவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாயக்காள்(60) என்ற நோயாளிக்கு செலுத்துவதற்காக எடுக்கப்பட்டது. இந்த ரத்தத்தை மாயக்காளுக்கு செலுத்தும்போது அரிப்பு உள்ளிட்ட எதிர் விளைவுகள் ஏற்பட்டதால் ரத்த வங்கிக்கு அந்த ரத்தம் திருப்பி அனுப்பப்பட்டது. அவருக்கு மீண்டும் வேறு ரத்த உறை அனுப்பப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் பயன்படுத்த இயலாது என்பதால் அதை அழிப்பதற்காக ஹைட்ரோ குளோரைடு திரவம் ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அந்த ரத்தத்தை இருவரும் எடுத்துக்கொண்டு கீழே உள்ள கழிவறைக்கு கொண்டு சென்று ஊற்றி வீடியோவாக எடுத்துள்ளனர். இதனை துப்புரவு பணியாளர் முனியசாமி எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் மீதும் காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story