தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2018 10:55 PM GMT (Updated: 2 Aug 2018 10:55 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையை சேர்ந்த வக்கீல் ஜான் வின்சென்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் விதிமுறைகளை பின்பற்றவில்லை. போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களை சேதப்படுத்தி போலீசாரை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சிப்காட் போலீஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு (குற்றவழக்கு எண்-191) செய்துள்ளனர். இதில் கலவரம் சம்பந்தப்பட்ட அனைத்து சம்பவங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இதே சம்பவத்துக்காக தூத்துக்குடி வடக்கு, புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களிலும் ஏராளமான வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சட்டவிரோதம். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை ஒருபுறமும், உள்ளூர் போலீசாரின் தொந்தரவு ஒருபுறம் என மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

எனவே மேற்கண்ட சம்பவம் குறித்து பதிவான மற்ற வழக்குகள் அனைத்தையும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 161 (3)-ன் கீழ் பெறப்பட்ட வாக்குமூலமாக கருதி, சிப்காட் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவழக்கு எண் 191-ன் உடன் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் பிரதான வழக்கை ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி பொன்பாண்டி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர், “ஒரே சம்பவத்துக்கு ஏராளமான வழக்குகளை போலீசார் பதிவு செய்தது ஏன்?“ என்று கேள்வி எழுப்பி இருந்தனர். விசாரணையின் முடிவில், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் அந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி கலவர வழக்கில் குறிப்பிட்ட நபர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்தது, ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் மற்றொரு வழக்கில் கைது செய்வதற்காகவா? போலீசாரின் இந்த செயல் “இனிமேல் போராட்டத்தில் இறங்குவீர்களா?“ என்று கேட்பதை போல் உள்ளது.

ஒரே சம்பவத்துக்கு அடுத்தடுத்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்வதால் பொதுமக்கள் தங்களது குடும்பங்களை சேர்ந்தவர்களையும் கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி பலரை கைது செய்துள்ளனர். இது தமிழக அரசுக்கு தெரிந்து தான் நடந்ததா? தெரியாமல் நடந்ததா? தமிழக அரசு ஏன் காவல்துறையின் பின்னால் செல்கிறது.

பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கத்திலும் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆவதை தடுக்கும் நோக்கத்திலும் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை குற்றவியல் நடைமுறை சட்டம் 161 (3)-ன்படி பெறப்பட்ட வாக்குமூலமாக கருத வேண்டும், அனைத்து வழக்குகளையும் குற்ற வழக்கு எண் 191-உடன் சேர்த்து, ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story