வெள்ளாளப்பட்டியில் இருந்து சேலத்துக்கு தாறுமாறாக ஓடிய 2 தனியார் பஸ்கள்; பயணிகள் பீதி
சேலத்தில் தாறுமாறாக ஓடிய 2 தனியார் பஸ்களால் பயணிகள் பீதி அடந்தனர்.
கருப்பூர்,
சேலம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் இருந்து சேலத்துக்கு நேற்று இரவு 8 மணிக்கு தடம் எண் 9, 21 ஆகிய 2 தனியார் பஸ்கள் புறப்பட்டு சென்றன. இந்த பஸ்களின் டிரைவர்களும் ஒவ்வொரு பஸ்நிறுத்தத்திலும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்றனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அலறினார்கள். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது 2 பஸ்களின் கண்டக்டர்களும், டிரைவர்களும் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டனர். இதனால் அந்த பஸ்களில் பயணம் செய்த பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டனர். இதையடுத்து கருப்பூர் போலீஸ் நிலையம் முன்பு 2 பஸ்களும் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் 2 பஸ்களின் கண்டக்டர்களும், டிரைவர்களும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் முன்பு இருதரப்பினரும் கடும் வாக்குவாதம் செய்து கொண்டனர். இருதரப்பு கண்டக்டர்களும் ஒருவரையொருவர் உரிமம் இல்லாமல் பணியாற்றுவதாக புகார் தெரிவித்தனர். குறித்த நேரத்துக்கு முன்பாக பஸ்சை எடுத்து விட்டு வந்து விட்டதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டினார்கள். இவர்களின் வாக்குவாதத்தால் 2 பஸ்களிலும் இருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்தனர். வேலை முடிந்து குறித்த நேரத்தில் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லையே என்று பெண்கள் சிரமம் அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story