ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் ஜோர்ஜ் தெரிவித்து உள்ளார்.
சேலம்,
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி சேலம், ஈரோடு, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மேட்டூர் பகுதிக்கு வருவதுண்டு. அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்பன் சாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
இந்தாண்டு ஆடிப்பெருக்கு இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்றில் வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, தண்ணீர் அதிகமாக வருவதால் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும் இடங்களை தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் குளிக்கக்கூடாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தண்ணீரில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
500 போலீசார் பாதுகாப்பு
கரையோரங்களில் நின்றுகொண்டு செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டு காவிரி ஆற்றில் நீராடுவதை தவிர்க்க வேண்டும். தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆடிப்பெருக்கையொட்டி சேலம் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று மாலை முதலே ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story