போலி சான்றிதழ் தயாரித்த கிராம உதவியாளர் உள்ளிட்ட கும்பலுக்கு வலைவீச்சு


போலி சான்றிதழ் தயாரித்த கிராம உதவியாளர் உள்ளிட்ட கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாட்டில் போலி சான்றிதழ் தயாரித்த கிராம உதவியாளர் உள்ளிட்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,



தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சமையன்குடிக்காடு மேலத்தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது45). விவசாயி. இவரது தந்தை ரெங்கசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் தந்தை ரெங்கசாமியின் இறப்பு சான்றிதழை பெறுவதற்காக ராமன் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது ராமனை அனுகிய ஒரு இடைத்தரகர் பணம் கொடுத்தால் ஒரு கிராம உதவியாளர் மூலம் இறப்பு சான்றிதழை உடனே பெற்றுதருவதாக கூறினார். இதை நம்பிய ராமன் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த இடைத்தரகரிடம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இறப்பு சான்றிதழை சம்மந்தப்பட்ட இடைத்தரகரும், கிராம உதவியாளரும் ராமனிடம் கொடுத்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் ராமன் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் நகல் வேண்டி ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது ராமன் அளித்த அவரது தந்தையின் இறப்பு சான்றிதழை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த சான்றிதழ் போலியானது என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரை முறைகேடாக தயாரிக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இது குறித்து ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை அறிந்த இடைத்தரகர் மற்றும் கிராம உதவியாளர் தலைமறைவாகிவிட்டனர். இதனால் போலீசாரின் விசாரணைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து மனு எழுதி கொடுத்துவந்த நபர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story