மகாவீர் பிளான்டே‌ஷன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.9¼ கோடி வழங்க குழு அமைப்பு


மகாவீர் பிளான்டே‌ஷன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.9¼ கோடி வழங்க குழு அமைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

மகாவீர் பிளான்டே‌ஷன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.9¼ கோடி வழங்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி–கூடலூர் சாலையில் நடுவட்டம் அருகே மகாவீர் பிளான்டே‌ஷன் என்ற தேயிலை தோட்ட நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணிக்கொடை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற பண பலன்களை தொழிலாளர்கள் பெற முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை தமிழக அரசு வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

மகாவீர் பிளான்டே‌ஷன் தேயிலை தோட்ட நிறுவனத்தை சேர்ந்த பிராஸ்பெக்ட் எஸ்டேட், லிடில்ஸ்டேல் எஸ்டேட்டில் சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகத்தால் வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், பணிக்கொடை போன்ற பண பலன்களை தமிழக அரசு மூலம் நிலுவைத்தொகை ரூ.9 கோடியே 25 லட்சத்தை தொழிலாளர்களுக்கு வழங்க தொழிலாளர் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் தொழிலாளர் துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமாரி, இணை செயலாளர்கள் தமிழரசி, ரமேஷ், தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, துணை ஆணையர் முருகேசன் உள்பட 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழுவினர் நடுவட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 8–ந் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருங்கால வைப்புநிதி கணக்கு எண், வங்கி கணக்கு புத்தகம், 5 புகைப்படங்கள், அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் தவறாமல் கலந்துகொண்டு குழுவினரிடம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story