ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமேசுவரம் கோவிலில் புதிதாக 6 தீர்த்த கிணறுகள் தோண்டும் பணிகள் நிறைவு
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமேசுவரம் கோவிலில் புதிதாக 6 தீர்த்த கிணறுகள் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் கோடி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடும் இடத்தை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அதன் பின்பு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் 1–வது தீர்த்தமான மகாலட்சுமி முதல் 6–வது தீர்த்தமான சக்கர தீர்த்தம் வரை குறுகிய பாதையில் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த 6 தீர்த்த கிணறுகளிலும் பக்தர்கள் யாரும் நீராடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இது பக்தர்களுக்கு மனவேதனையை அளித்து வந்தது.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி செல்லும் வகையில் குறுகிய பாதையில் அமைந்துள்ள 1 முதல் 6 வரையிலான தீர்த்த கிணறுகளை இடம் மாற்றம் செய்து, அதற்கான வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த 1 முதல் 6 வரையிலான 6 தீர்த்த கிணறுகளை மட்டும் கோவிலின் 2–ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் இடம் மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக 2–ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக 5 தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. இறுதி கட்டமாக யானை நிற்கும் இடம் அருகே ஏற்கனவே மூடப்பட்ட ஒரு தீர்த்த கிணற்றை மீண்டும் தோண்டி கிணற்றை சுற்றிலும் கான்கிரீட் பூச்சு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் அந்த தீர்த்த கிணறுகளின் பணிகளும் முழுமையாக முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி கூறியதாவது:– ஐகோர்ட்டு உத்தரவு படி ராமேசுவரம் கோவிலில் ரூ.12 லட்சத்தில் கோவிலின் 2–ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக 5 தீர்த்த கிணறுகள் தோண்டும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. 6–வது தீர்த்த கிணற்றின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த புதிய 6 தீர்த்த கிணறுகளையும் இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் 6 தீர்த்த கிணறுகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் கோவிலில் உள்ள கடைசி தீர்த்தமான கங்கை தீர்த்தத்திற்கு நிகராக விளங்கும் கோடி தீர்த்தத்தையும் ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உடன் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உடனிருந்தார்.