ஸ்மார்ட் போன் வாயிலாக சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம், கலெக்டர் நடராஜன் தகவல்


ஸ்மார்ட் போன் வாயிலாக சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம், கலெக்டர் நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் போன், இணையதளம் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இ–சேவை மையங்கள் மூலமாக தற்போது வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் 20 விதமான சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இ–சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வரும் விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்துமதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களின் சேவைகளை தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/Citizen என்ற இணையதள முகவரியில் தங்களை பதிவு செய்து தங்களுக்கான பயனர் பெயர் பெற்று, பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். மேலும் இதற்கான விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் UMANG என்னும் ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ், பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இதற்கான சேவை கட்டணமாக ரூ.60–ஐ இணையதள வங்கிமுறை அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story