சீர்காழி அருகே மரத்தில் பஸ் மோதியது; 23 பேர் படுகாயம்
சீர்காழி அருகே மரத்தில் பஸ் மோதி 23 பேர் படுகாயமடைந்தனர். டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சீர்காழி,
புதுச்சேரியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று மாலை ஒரு தனியார் பஸ் காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. சீர்காழி அருகே ஆயங்குடிபள்ளம் என்ற இடத்தில் சென்றபோது அந்த பஸ் திடீரென சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி மனைவி ரேவதி (வயது44), அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி சித்ரா (32), கலியமூர்த்தி மனைவி மதியழகி (50), வள்ளியம்மாள் (44), அஞ்சம்மாள், சீர்காழி செட்டித்தெருவை சேர்ந்த உஷா (60), கீழஅனுமன்பட்டு கிராமத்தை சேர்ந்த கலைமணி (78), கங்கா (40), பஸ் கண்டக்டர் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் (58) உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 23 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பாரதி எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நற்குணன், நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரூர் செயலாளர் போகர்ரவி ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் படுகாயமடைந்த புத்தூர் பகுதியை சேர்ந்த ரேவதி, ஜெயச்சந்திரன், சீர்காழியை சேர்ந்த உஷா, எருக்கூரை சேர்ந்த நல்லசாமி, திருமலை, புதுச்சேரியை சேர்ந்த பஸ் கண்டக்டர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைப்பதற்கான வாகன வசதி மற்றும் நிதி உதவியை பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார். விபத்தில் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் கூடியதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக சிதம்பரம்-சீர்காழி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story