கூடுதல் கட்டணம் செலுத்த வலியுறுத்தி வீட்டு மின் இணைப்பை துண்டிக்க தடை மின்வாரியத்திற்கு, சிவகங்கை கோர்ட்டு உத்தரவு


கூடுதல் கட்டணம் செலுத்த வலியுறுத்தி வீட்டு மின் இணைப்பை துண்டிக்க தடை மின்வாரியத்திற்கு, சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2018 4:00 AM IST (Updated: 4 Aug 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் கட்டணம் செலுத்த வலியுறுத்தி வீட்டு மின் இணைப்பை துண்டிக்க இடைக்கால தடை விதித்து மின்வாரியத்திற்கு, சிவகங்கை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை டி.புதூர் முதல் தெருவில் வசிப்பவர் சுந்தரநடராஜன். இவருடைய மனைவி செல்வராணி. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வந்த மின் ஊழியர், அவரது வீட்டில் மின் அளவீடு எந்திரம் தவறாக வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய வீட்டிற்கு முந்தைய கட்டணங்களின் சராசரியை கட்டணமாக செலுத்தும்படி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செல்வராணி முந்தைய கட்டணங்களில் சராசரியாக ரூ.620 வீதம் செலுத்தி வந்துள்ளார். மேலும் தன்னுடைய வீட்டிற்கு புதிய மின் அளவீட்டு எந்திரத்தை பொறுத்தும்படியும் அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு புதிய மின் அளவீடு எந்திரம் பொருத்தப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மீண்டும் மின் கட்டணம் அளவீடு செய்ய வந்த மின் ஊழியர், மின் அளவீடு எந்திரம் வேலை செய்வது போல் குறிப்பிட்டு ரூ.720–ஐ செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் செல்வராணி மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தபோது, ரூ.720 கட்டவில்லை என்றால், வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து செல்வராணி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி அர்ச்சுனன், வீட்டு மின் இணைப்பை துண்டிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


Next Story