கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் கரூர் அருகே என்ஜின் பழுதால் நடுவழியில் நின்றது, பயணிகள் கடும் அவதி
கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் என்ஜின் பழுதால் 3 மணி நேரம் தாமதமாக மதுரை ரெயில்நிலையம் வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மதுரை,
கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு தினசரி பாசஞ்சர் ரெயில் இருமார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.56320) கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இதற்கிடையே, நேற்று காலை கோவையில் இருந்து வந்து கொண்டிருந்த ரெயில் பாளையம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலின் என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது.
ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை ஒரேயொரு ரெயில்பாதை மட்டும் இருப்பதால் என்ஜின் டிரைவர்கள் என்ன செய்வதென்று திகைத்தனர். பின்னர் இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஈரோடு ரெயில் என்ஜின் பராமரிப்பு பணிமனையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரெயில் மீண்டும் பாளையம் ரெயில் நிலையத்துக்கு பின்னோக்கி இழுத்துக்கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கு கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால், அந்த ரெயில் அங்கிருந்து சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதையடுத்து, இந்த ரெயில் மதியம் 2.15 மணிக்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.25 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்து சேர்ந்தது.
இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்த ரெயிலுக்கு வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கும், நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கும் இணைப்பு ரெயில் உள்ளது. இதனால், இணைப்பு ரெயிலை எதிர்பார்த்து வந்த பெரும்பாலான பயணிகள் மதுரை ரெயில்நிலையத்தில் இறங்கி விட்டனர்.