பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட்ராஜாவுக்கு ஜாமீன் மும்பையில் தங்கியிருக்க ஐகோர்ட்டு உத்தரவு


பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட்ராஜாவுக்கு ஜாமீன் மும்பையில் தங்கியிருக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ராக்கெட்ராஜா என்ற ஆறுமுகபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பேராசிரியர் செந்தில்குமார். முன்விரோதம் காரணமாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, நெல்லை போலீசார் என்னை கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

எனக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்குமாறு நெல்லை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.தாரணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் மும்பையில் தங்கியிருந்து விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதனையடுத்து, மனுதாரர் மும்பை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தினமும் காலை, மாலை என 2 வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story