அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் ஒற்றை யானை தொடர் அட்டகாசம்
அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் ஒற்றை யானை தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அகழி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மான், யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது பர்கூர் மலைக்கிராமத்தில் பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியே கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை அடிக்கடி கடம்பூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட துருசனாம்பாளையம் பகுதியில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் அதே ஒற்றை ஆண் யானை நேற்று காலை 6 மணி அளவில் மீண்டும் பர்கூர் துருசணாம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை நாசம் செய்து கொண்டு இருந்தது.கிராமப்பகுதிக்குள் யானை நிற்பதை கவனித்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிராமமக்கள் உதவியுடன் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். மேலும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும், பட்டாசுளும் வெடித்தனர். இதனால் அந்த யானை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இதைத்தொடர்ந்து காலை 8 மணி அளவில் தானாகவே அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பர்கூர் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி ஒற்றை யானை ஒன்று வெளியேறுகிறது. இந்த யானை கிராமப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாக வருகிறது. இதனால் பெண்கள், சிறுவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே யானை கிராமப்பகுதிக்குள் நுழையாதவாறு அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.