அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அறச்சலூர்,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18–ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழாவாக நடைபெறும். அதன்படி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் ஈரோடு எஸ்.செல்வகுமாரசின்னையன் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, ஆர்.மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை ஆதினம் சார்பில் தீரன் சின்னமலையின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடவுள் என்கிற குருசாமி கலந்துகொண்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஜி.நெப்போலியன், சுபவளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தினேஷ்குமார், சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் பரணீதரன், எஸ்.ஆர்.செல்வம், மாணவர் அணி இணைச்செயலாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

தி.மு.க. சார்பில் கட்சியின் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநரக செயலாளர் மு.சுப்பிரமணியம், எல்லப்பாளையம் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி, வட்டார தலைவர் முத்துகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் பி.விஜயகுமார், சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ராமநாதன், மாநில வக்கீல் அணி அமைப்பாளர் என்.பி.பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் ஜி.கே.மணி, தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், துணைப்பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், வேலுசாமி, ரவிசந்திரன், ஜோதிமுத்து, துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் எம்.முத்துகுமார், கே.எஸ்.கிருபாகரன், மாவட்ட தலைவர் செல்வராஜ், பி.நடராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கட்சியினர் பலர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி, மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் பலர் பல்வேறு வாகனங்களில் ஓடாநிலைக்கு திரண்டு வந்தனர். அப்போது தனியரசு எம்.எல்.ஏ. தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஈரோடு மாநகர செயலாளர் வைரவேல்கவுண்டர், நிர்வாகிகள் நவீன், லிங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எம்.ராஜாமணி, தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் செந்தில், செயலாளர்கள் முத்து, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்து முன்னணி சார்பில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். இதில் துணைத்தலைவர் பூசப்பன், செயலாளர் கிஷோர் குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாநில பொருளாளர் கணேசமூர்த்தி, தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இதில் மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகுபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் நிர்வாகிகள் சுப்பிரமணி, தமிழ்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், கொங்குநாடு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் கோபால்ரமேஷ், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ், கொங்கு வேளாளக்கவுண்டர்கள் மக்கள் பேரவை மாநில தலைவர் கருப்புசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் பலர் தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொதுமக்கள் பலரும் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story