திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்


திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 4 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே, பாரத ஸ்டேட் வங்கி கொங்குநகர் கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் எந்திரத்தை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஏ.டி.எம். எந்திரத்தில் அந்த ஆசாமி பட்டன்களை தொடர்ந்து அமுக்கியபடி செயல்பட்டதால் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை பாதுகாப்பு மையத்துக்கு எச்சரிக்கை மணி ஒலித்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்குள் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை வங்கி பாதுகாப்பு அதிகாரிகள் மும்பையில் இருந்து கண்காணித்தனர்.

அதில் 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி கால்சட்டை, டி–சர்ட் அணிந்தும், டி–சர்ட்டால் தனது தலையை போர்த்தியபடியும் ஏ.டி.எம். மையத்துக்குள் வந்துள்ளார். அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் பட்டன்களை அமுக்கியபடியும், கீழே குனிந்து எந்திரத்தை திறப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன. சுமார் 45 நிமிட நேரமாக அந்த ஆசாமி ஏ.டி.எம். மையத்துக்குள் வருவதும், போவதுமாக சந்தேகத்துக்கு இடமாக காணப்பட்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி பாதுகாப்பு அதிகாரிகள், திருப்பூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முதலில் ஏ.டி.எம். மையத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தை கண்டறிந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஏ.டி.எம். எந்திரம் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. மேலும் எந்திரம் வேலை செய்யாமல் இருந்தது. எந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடிப்பதற்கான வேலைகளை மர்ம ஆசாமி ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அந்த ஆசாமி தொழில்நுட்ப அறிவு பெற்றவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் காவலர் இல்லை. இதை தெரிந்து கொண்டு அந்த ஆசாமி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story