கார் மீது ரெயில் மோதல்; 2 பெண்கள் பலி


கார் மீது ரெயில் மோதல்; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கார் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சின்னசேலம்,



இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தவேல் மகள் காவ்யா (வயது 22). இவர் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பெரியசிறுவத்தூர் அருகில் உள்ள பெரியாயி அம்மன் கோவிலுக்கு தனது சித்தப்பா குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்ய காவ்யா முடிவு செய்திருந்தார்.

அதன்படி நேற்று காலை 8 மணி அளவில் கடலூர் அடுத்த கோண்டூரை சேர்ந்த சுகாதார ஆய்வாளரான தனது சித்தப்பா வெற்றிவேல் (55), அவரது மனைவி சித்ரா (40), மகன் மகேஸ்வரன்(22) ஆகியோருடன் ஒரு காரில் நயினார்பாளையத்தில் இருந்து பெரியசிறுவத்தூருக்கு சென்றார்.

பின்னர் அங்கு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு 11.30 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை வெற்றிவேல் ஓட்டினார். 11.45 மணிக்கு பெரியசிறுவத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் அருகில் கார் வந்த போது, சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வெற்றிவேல், ரெயில் வருவதற்குள் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்து சென்று விடலாம் என முடிவு செய்து காரை வேகமாக ஓட்டினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பயணிகள் ரெயில் வெற்றிவேல் ஓட்டிச்சென்ற கார் மீது மோதியது.

இதில் ரெயில் மோதிய வேகத்தில் கார் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். இந்த விபத்தில் காரில் இருந்த காவ்யா, சித்ரா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வெற்றிவேல், மகேஸ்வரன் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை ரெயில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான காவ்யா, சித்ரா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் வந்து, ரெயில் என்ஜினை சோதனை செய்தனர். இதையடுத்து 1¼ மணி நேரம் தாமதமாக, மதியம் 1 மணிக்கு ரெயில் விருத்தாசலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது கார் மீது ரெயில் மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story