அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு இரவோடு, இரவாக நியமன உத்தரவு
தேனி மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று பணி நியமன உத்தரவை அதிகாரிகள் வழங்கினர். பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்தது.
தேனி,
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக இருந்த 336 அங்கன்வாடி பணியாளர்கள், 22 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 362 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 720 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தன.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறுதியில் நடந்தது. ஆனால், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்படவில்லை. சில அரசியல் மற்றும் நிர்வாக காரணங்களால் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும், நேர்முகத்தேர்வு நடத்தியும் பணி நியமனம் செய்யப்படாமல் இருப்பதை கண்டித்தும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான பயனாளிகள் பட்டியல், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்பட்டது. அதில் தகுதி வாய்ந்த சுமார் 550 பேருக்கு பணி நியமன உத்தரவு தயாரானது.
இந்த உத்தரவை வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கான பணி நியமன உத்தரவை தேர்வு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குமாறும், இரவுக்குள் வழங்கி முடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. அவர்கள் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு வீடு தேடிச் சென்று பணி நியமன உத்தரவை வழங்கினர். அதை புகைப்படமாக எடுத்து மாவட்ட கலெக்டருக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தனர். இரவு 11 மணி வரை இந்த பணி நடந்தது.
சில இடங்களில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களையும் எழுப்பி பணி நியமன உத்தரவுகளை அதிகாரிகள் வழங்கினர். வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்த பெண்கள் பலருக் கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்துள்ளது.
Related Tags :
Next Story