ஐபோன், லேப்டாப்கள் வாங்கித்தருவதாக 2 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி வாலிபர் கைது
ஐபோன், லேப்டாப்கள் வாங்கித்தருவதாக கூறி இருவரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த வாலிபரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மாங்காடு, இந்திரா நகர், கலைஞர் தெருவை சேர்ந்தவர் அகமது பாரூக் (வயது41). இவர் அதேபகுதியில் கோழிக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் செங்கல்பட்டு, ஈச்சன்காரணையை சேர்ந்த பூபதி (31) என்பவர், தனக்கு சுங்க அலுவலகத்தில் அதிகாரிகளை தெரியும் எனவும், அவர்கள் மூலம் ‘ஐபோன்’கள் வாங்கித்தருவதாகவும் கூறினார்.
இதை நம்பிய அவர் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பூபதி ‘ஐபோன்’கள் வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
சிறையில் அடைப்பு
எனவே இதுபற்றி அகமது பாரூக் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீசார், பூபதியை நேற்று கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் பாரூக்கை போலவே, திருவாரூர் மாவட்டம் அரசவங் காட்டை சேர்ந்த வெங்கட்ராமன் (27) என்பவரிடம் ‘லேப்டாப்’கள் வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. பூபதியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story