உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். இதுபற்றி மாவட்டம் வாரியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர்.
பெங்களூரு,
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். இதுபற்றி மாவட்டம் வாரியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர்.
வேட்புமனு தாக்கல்கர்நாடகத்தில் 105 நகர உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அவற்றுக்கு வருகிற 29–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற 10–ந் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நகர உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா சமீபத்தில் காங்கிரஸ் மந்திரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற மந்திரிகள், நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தனித்து போட்டியிடுவது தான் நல்லது என்றும், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு மட்டும் போதும் என்றும் மந்திரிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தனித்து போட்டியிடுவதே நல்லதுஇந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டம் வாரியாக கட்சி தலைவர்களை அழைத்து அவர்களிடம், நகர உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து கேட்டனர். அதில் பெரும்பாலானர்கள் தனித்து போட்டியிடுவதே நல்லது என்று கருத்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.