சிமெண்டு தொழிற்சாலை கட்டுமான பணியில் கிரேன் வாகனம் விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் நசுங்கி சாவு


சிமெண்டு தொழிற்சாலை கட்டுமான பணியில் கிரேன் வாகனம் விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே சிமெண்டு தொழிற்சாலை கட்டுமான பணியில் கிரேன் வாகனம் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உடல் நசுங்கி செத்தனர்.

கலபுரகி,

கலபுரகி அருகே சிமெண்டு தொழிற்சாலை கட்டுமான பணியில் கிரேன் வாகனம் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உடல் நசுங்கி செத்தனர்.

இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்கினார்கள். போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரேன் வாகனம் சரிந்து விழுந்தது

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோட்லா கிராமத்தில் புதிதாக சிமெண்டு தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதுதவிர கலபுரகி, யாதகிரி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். சிமெண்டு தொழிற்சாலைக்காக மேற்கூரை அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த பணியில் ராட்சத கிரேன் வாகனம் பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு ராட்சத கிரேன் வாகனம் திடீரென்று சரிந்து அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. மேலும் கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளும் தொழிலாளர்கள் மீது விழுந்தன. இதனால் கிரேன் வாகனத்திற்கு அடியில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிருக்கு போராடினார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்தனர்.

6 தொழிலாளர்கள் சாவு

அவர்கள், கிரேன் வாகனத்தின் கீழ் சிக்கிய 8 தொழிலாளர்களையும் மீட்டனர். அவர்களில் ஒரு தொழிலாளியின் தலையில் பலத்தகாயம் அடைந்திருந்தால், அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். மற்ற 7 பேரும் சேடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முன்னதாக இதுபற்றி அறிந்ததும் சேடம் போலீசார் தொழிற்சாலைக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

மேலும் கலபுரகி போலீஸ் சூப்பிரண்டு சசிகுமாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது பலியானவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தபராக் அலி(வயது 26), பிபின் சகானி(22), அஜய்(31), கோகு(26), முகமது ஜபீர்(32), சுதாகர்(30) ஆகியோர் என்பதும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் சகாஜாத், முகமது சாதிக் என்பதும் தெரியவந்தது. அத்துடன் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் கட்டுமான பணி நடந்ததாலேயே கிரேன் வாகனம் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலியானதும் தெரியவந்தது.

போராட்டம்

இந்த நிலையில், நேற்று காலையில் சிமெண்டு தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், ஏற்கனவே இங்கு நடந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகி விட்டதாகவும், அதன்பிறகும், உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் முன் எச்சரிக்கை எடுக்க தவறி விட்டதாகவும் கூறி தொழிற்சாலை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கிரேன் வாகனம் சரிந்து விழுந்து பலியான 6 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். இதனை ஏற்க தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

போலீசார் மீது கற்கள் வீச்சு

அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலைக்காக அமைக்கப்பட்டு இருந்த கட்டிடத்தின்மீது கற்களை வீசி தாக்கினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கினார்கள். இதுபற்றி அறிந்ததும் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சமாதானப்படுத்த அவர்கள் முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது. அதே நேரத்தில் தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்கியதில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 3 போலீசாரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளர், குத்தகைதாரரை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் கலபுரகியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story