திருவான்மியூர் கடற்கரையில் எலியை வேட்டையாடிய பாம்பு நடைபயிற்சி சென்றவர்கள் அச்சம்


திருவான்மியூர் கடற்கரையில் எலியை வேட்டையாடிய பாம்பு நடைபயிற்சி சென்றவர்கள் அச்சம்
x
தினத்தந்தி 4 Aug 2018 5:15 AM IST (Updated: 4 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் எலியை பாம்பு வேட்டையாடியது. இதனால் நடைபயிற்சி சென்றவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் குழுவாக இணைந்து நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.நா.சபை நடைபயிற்சி குழுவை சேர்ந்த ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் என்.ஸ்ரீதர், விலங்கியல் ஆர்வலர் பத்ரி உள்ளிட்டோர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திருவான்மியூர்-கொட்டிவாக்கம் கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் சென்ற போது, பாம்பு ஒன்று எலியை(பெருச்சாளி) வேட்டையாடிக் கொண்டிருந்தது.

இந்த காட்சியை பத்ரி தனது செல்போனில் படம் பிடித்தார். எலியை நெரித்துக்கொன்ற பாம்பு அதனை உண்பதற்கு தயாரானது. அப்போது காகங்கள் கூட்டம் அங்கு வந்ததால், பாம்பு அங்கிருந்து நைசாக சென்றுவிட்டது. பின்னர் இறந்து போன எலியை காகங்கள் கொத்தி தின்றன.

தெருநாய்கள் தொல்லை

நடைபயிற்சி செல்லும் இடத்தில் பாம்பு நடமாட்டம் நடைபயிற்சியில் ஈடுபவர்கள் மத்தியில் கலக்கத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து என்.ஸ்ரீதர் கூறியதாவது:-

திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 15 ஆண்டுகளாக நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தற்போது தான் இங்கு பாம்பை பார்த்துள்ளேன். கடற்கரையையொட்டி வீடுகள் கட்டுவதற்காக காலிமனைகள் உள்ளன. அங்கு அதிகளவில் பாம்புகள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். எனவே அங்கிருந்து தான் பாம்பு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நடைபயிற்சி செல்பவர்கள் தயக்கமின்றி செல்வதற்கு ஏதுவாக திருவான்மியூர் கடற்கரை பகுதியை சுற்றி உள்ள பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டும். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லையும் அதிகம் இருப்பதால் நடைபயிற்சி செய்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இங்கிருந்து தெருநாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மண்ணுளி பாம்பை...

கடற்கரை பகுதிக்கு வந்தது மலைபாம்பு என்று தகவல் பரவியது. இது குறித்து கிண்டி பாம்பு பண்ணையை சேர்ந்த சுற்றுச்சூழல் அலுவலர் கண்ணனிடம் படத்தை காட்டி விளக்கம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

மலைபாம்பு போன்றே ‘காமன் சேன்ட் போவா’ என்ற மண்ணுளி பாம்பு உருவம் கொண்டிருக்கும். இதுவும் இரையை மலைபாம்பு போன்றே நெரித்து கொல்லும். இது விஷ தன்மை அற்றது. இந்த மண்ணுளி பாம்பு தான் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story