சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி
சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றது.
மும்பை,
சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றது.
மாநகராட்சி தேர்தல்
ஜல்காவ் மற்றும் சாங்கிலி மாநகராட்சிகளுக்கு கடந்த 1-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஜல்காவில் பா.ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் சாங்கிலி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஜல்காவ்
78 வார்டுகளை கொண்ட ஜல்காவ் மாநகராட்சியில், பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் 57 வார்டுகளை கைப்பற்றின. ஜல்காவ் பகுதியில் பலம் வாய்ந்தவராக கருதப்படும் சிவசேனாவை சேர்ந்த சுரேஷ் அக்கட்சியில் இருந்து விலகி கன்தேஷ் விகாஸ் அகாடி கட்சியில் இணைந்து போட்டியிட்டார்.
இருப்பினும் அந்த கட்சியால் 13 வார்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 11 இடங்களை கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாங்கிலி
இதேபோல் சாங்கிலி மாநகராட்சியில் உள்ள 78 வார்டுகளில் 41 வார்டுகளை பா.ஜனதா கட்சி கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தது.
தற்போது மாநகராட்சியை கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் கட்சியால் வெறும் 20 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 15 இடங்களையும் மற்றவை 2 இடங்களையும் கைப்பற்றியது.
முந்தைய தேர்தலில் பா.ஜனதா இங்கு ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி நன்றி
நாடாளுமன்றம் மற்றும் மராட்டிய சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த இரு மாநகராட்சிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாநகராட்சிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story