பேரம்பாக்கத்தில் 51 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


பேரம்பாக்கத்தில் 51 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:38 AM IST (Updated: 4 Aug 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் 51 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பேரம்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள பலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதில் மளிகை கடை, இனிப்புகடை, இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை, மருந்து கடை, ஓட்டல்கள், வெல்டிங் கடைகள் போன்ற பல்வேறு கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோரி தொடர்ந்து புகார்கள் வந்தது.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.

கடைகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், வருவாய் ஆய்வாளர் செல்வபாரதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேரம்பாக்கம் பஜார் பகுதியில் சாலையோரம் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு பகுதி மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மளிகை கடை, ஓட்டல்கள், மெக்கானிக் கடை என மொத்தம் 51 கடைகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.

இதன் மதிப்பு ரூ.17 கோடியே 46 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த வழியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மீதமுள்ள கடைகளை விரைவில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையொட்டி மப்பேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story