வேம்பேடு கிராமத்தில் அம்மா திட்ட முகாமில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வேம்பேடு கிராமத்தில் அம்மா திட்ட முகாமில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மெய்யூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வட்ட வழங்கல் அலுவலர் பிரித்தி, வருவாய் ஆய்வாளர் ஜானகி, கிராம நிர்வாக அதிகாரிகள் மகாராஜன், மணிகண்டன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராணி பூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திருவள்ளூரில் இருந்து மூலக்கரை, சித்தம்பாக்கம், எரையூர், ராஜபாளையம், மெய்யூர், வேம்பேடு வழியாக மேல்செம்பேடு கிராமத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சாலை சரியில்லை என்று நிரந்தரமாக இயக்கவில்லை. கீழானூர் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. மேலும் தெரு விளக்குகள் சரவர எரிவதில்லை. மின் வயர்கள் மிகவும் பழமையானதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
முற்றுகை
இவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனடி தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தனி தாசில்தார் லதா உறுதி அளித்தார்.
இதனால் அம்மா திட்ட முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பெற்றுகொண்டார். இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் கே.பாஸ்கர், ஆர்.பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story